[ Add new entry ]
“ஆடவர் தோளிலும் ‘கா’ மடவார் நாவிலும் ‘கா’” என்று மட்டக்களப்பு மாநிலம் பற்றி கூறுவதுண்டு.
ஆண்கள் தோளிலே காவுதடியில் பாரம் சுமப்பர். பெண்கள் என்னகா சுகமா இருக்கையகா என்றவாறு இனிக்கப் பேசுவர். மட்டக்களப்பின் தெற்கே பிரதான பாதையில் எழுவான் கரையில் 23 கி.மீ. தூரத்தில் களுதாவளை என்ற பெருமை வாய்ந்த கிராமம் அமைந்துள்ளது. “காலி விளை பாக்கிற்கும் களுதாவளை வெற்றிலைக்கும் ஏலம் கிராம்பிற்கும் ஏற்றது காண் உன் எழில்வாய்” என்ற நாட்டுப் பாடல் களுதாவளையின் புகழ் கூறும்.
கற்றோரும் கடின உழைப்பாளிகளும் நிறைந்த இக்கிராமம் பல விடயங்களில் முன்னுதாரணமாக விளங்குகிறது. ஆலயங்களில் திருவிழாக்களை சிறப்பாகவும் செம்மையாகவும் கலை உணர்வோடும் ஆகம விதி முறைகளோடும் சைவ ஆசாரங்களோடும் செய்வது அவற்றுள் ஒன்றாகும். களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீமுருகன் ஆலயத்தில் இறுதிநாள் திருவிழாவன்று நடைபெறுகின்ற சுவாமி கிராமப் பிரதட்சண ஊர்வலம், சூகர வேட்டை என்ற திருவேட்டை, நாடகம் என்பனவும் தீர்த்தோற்சவத்தன்று சுவாமி தீர்த்தமாடும் திருநீற்றுக்கேணியை மலர்களால் நிறைத்து மலர்க்கேணியில் தீர்த்தமாடுவதும், தீர்த்தமாடித் திரும்பியதும் எழுந்தருளி மூர்த்திகளை திருப்பொன்னூங்சல் பலகையில் வைத்து இன்னிசை பாடல்களோடு ஊஞ்சலாட்டுவதும் உண்டு.
களுதாவளையைச் சேர்ந்த கதிரேசு சின்னத்தம்பி சுவாமி என்பவர் கதிர்காமக் கந்தனின் ஆணைப்படி திருநீற்றுக் கேணி அருகிலே ஓலைக் குடிசையில் முருக வழிபாட்டை ஆரம்பித்தார். கந்தன் அருளால் அங்கு அற்புதங்கள் பல நிகழ்ந்தன. காட்டுக் கோவிலாக இருந்த முருகன் ஆலயம் படிப்படியாக வளர்ச்சியுற்றது. இன்று கும்பாபிஷேகங்கள் பலவற்றைக் கண்டு கற்கோவிலாக உயர்ந்து நிற்கிறது. பிள்ளையார், நவக்கிரகம், வைரவர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். வீரமாகாளி அம்மன் ஆலயம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் முருகன் ஆலயத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. முருகனின் துணைத் தெய்வமாக வீரமாகாளி வீற்றிருக்கிறாள்.
கொடித்தம்பமற்ற மடாலயமான இவ்வாலயத்தின் அலங்கார உற்சவத் திருவிழாக் கிரியைகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வே.கு.சபாநாயகம் குருக்களுடன் சிவஸ்ரீ அ.நிசாந்தன் குருக்கள் செய்வார். ஆகஸ்ட் 05ம் திகதி புதன்கிழமை பிற்பகல் கிராமப் பிரதட்சணமும் மாலையில் ஆலய வீதியில் திருவேட்டையும் அதனைத் தொடர்ந்து ஆலய முன்றிலில் திருவேட்டை நாடகமும் நடைபெறவுள்ளன. பல்வேறு மிருகங்களின் உருவத்தில் மாறுவேடம் பூண்டிருப்போரை முருகப் பெருமான் தேவர்களும், வீரவாகுத் தேவரும் புடை சூழ திருவேட்டையாடும் காட்சி பக்திப் பரவசமூட்டுவதாகும். அடியார்களின் அரோகரா கோசம் ஓயாது ஒலித்துக் கொண்டிருக்க திருவேட்டை நடைபெறும். நாரதரின் கோள்மூட்டுதலினால் வள்ளி, தெய்வானைக்கும் முருகப் பெருமானுக்குமிடையே நடைபெறும் திருவேட்டை நாடகம் தேவலோகக் காட்சியாக அமையும். பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொன் மா மயிலாய் போற்றி என்று ஆறுமுகனைப் போற்றி அவனது திருவிழாக் கண்டு அவனோடு தீர்த்தமாடி வினை நீங்க அருள் பெற வாரீர்.
கலாபூஷணம்
ஆறுமுகம் – அரசரெத்தினம்
களுதாவளை.
பிள்ளையார் சுழி போட்டு தொடங்குகின்ற செயல்கள் வெற்றி பெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. வெற்றிலைச் சடங்கு செய்வதற்காக வேடுர் குலத் தலைவன் ‘களுவன்’ களுதாவளையின் வடமேற்கு மூலையில் ஆறும் சுனையும் அழகிய வயலும் சூழ்ந்த மணல் மேட்டில் பற்றைக் காடுகளை வெட்டி அகற்றினான்.
கந்தனைக் காண கதிர்காமம் செல்வோர் கால் இளைப்பாறும் இடமாக அது விளங்கியது. மட்டக்களப்பின் தெற்கே 23 கிலோ மீற்றர் தூரத்தில் எழுவான் கரையில் இக்கிராமம் அமைந்துள்ளது. கிழக்கே வங்காள விரிகுடாக் கடலும், மேற்கெ மட்டுநகர் வாவியும், தெற்கே களுவாஞ்சிகுடியும், வடக்கே தேத்தாந்தீவு, குடியிருப்பும் எல்லைகளாக உள்ளன.
தொன்மைவாய்ந்த இக்கிராமத்தில் களுவன் வணங்கிய இடத்தை ‘களுதேவாலய’ என்று அழைத்தார்கள். கதிர்காம யாத்திரிகர் இருவர் இவ்விடத்தில் தங்கி ஆவரை மரத்தன்டையில் நாகம்மை இருப்பதைக் கண்டு சுனையில் நீராடி திரிலிங்க பூசை செய்தனர்.
அப்போது நிலமட்டத்தில் சுயம்புலிங்கமொன்றைக் கண்டு அதனை தம்முடன் எடுத்துச் செல்ல எத்தனித்த போது சிவலிங்கம் சலம் வரையில் நீண்டு சென்றது. செய்தியறிந்த ஊரவர்கள் ஒன்று கூடி கொத்துப் பந்தலிட்டு கும்பிடத் தொடங்கினர். சுயம்புலிங்கம் அடியார்களுக்கு அற்புதங் காட்டியது. பூபால கோத்திரத்தைச் சேர்ந்த மணியாள் பூபால வன்னிமை நேரில் வந்து சிவலிங்கத்தைக் அருள் பெற்று அதிசயித்தார்.
ஊரவர்களை ஒன்று திரட்டி இலங்கையிலே சிவாலயங்கள் பல இருக்கின்றபடியால், சுயம்புலிங்கத்தை மூலசத்தி விநாயகராக வழிபடும்படி கூறினார் என்பதை ‘இலங்கை தன்னில் ஈசன் ஆலயங்கள் உண்டுபாரும் மூலசக்தி விநாயகர் ஆலயந்தான் இத்தேசம் இல்லாததாலே பிள்ளையார் கோவிலது அதுவாக சிவபிரானைப் பணியும் என்று இயம்புனார் வன்னமையும் இயம்பினாரே” என்ற களுவைநகர் களுதேவாலயக் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.
கலி பிறந்து இரண்டு எட்டு ஐந்து ஆண்டு சென்று இடப மாதம் இரண்டாந் திகதிதனில் முகூர்தமிட்டு ஆலயமாக வணங்கலானார். ஆரம்பத்தில் நாகதம்பிரான், வைரவர் பரிவார மூர்த்திகளாய் இருந்தனர். வெள்ளிக் கிழமைகளில் மட்டும் பகற் பூசை நடைபெற்று வந்தது. நாகதம்பிரான் ஆலயத்துள் பெரிய குரைச்சி ஒன்றினுள் பால், பழம் கரைத்து வைக்க நாகங்கள் குடித்து வந்தன.
நாகங்களே கோவிலுக்கு காவலாகவும் இருந்தன. கோவிலின் உள்ளும் சூழவிருந்த மருத மரப் பொந்துகளிலு அவை வாழ்ந்தன. தீயவர்களை சீறி படமெடுத்து பயமுறுத்திய நாகங்கள் அடியார்களுக்கு இதுவரை தீங்கு செய்ததேயில்லை. நாகத்தின் கண்ணீரில் இருந்து பிறந்த கண்ணகை அம்மனை வைகாசித் திங்களில் குளிர்த்தியாட்ட செட்டிப்பாளையம் கண்ணகையம்மன் ஆலயத்திற்கு குளிர்த்திக் குரைச்சியாக இதைக் கொண்டு செல்வது சம்பிரதாயம்.
களுதாவனையில் கண்ணகை அம்மனை முன்னிறுத்தி கொம்புச் சந்தி என்ற இடத்தில் கொழும்புமுறி விளையாட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற போது சாய்ந்தமருது, நாகமுனை, சேனைக்குடி, எருவில், மகிழூர், போரேகு நிகர், நாதனை என்னும் இடங்களிலிருந்து வந்தவர்களில் பலர் இவ்வூரில் குடிபதிந்தனர்.
எல்லை நாள் இவர் வந்த காலம் கேZர் தொள்ளாயிரத்து நாலாம் ஆண்டு ஆனி மாதம் பத்தோன்பதாம் திகதி புதன்கிழமை என்ற குறிப்பு கல் வெட்டிலுண்டு. ஆண்டுகள் உருண்டு ஓடிடவே அடியார் கூட்டம் பெருகிடவே ஆலயம் வளர்ச்சியுற்றது. தூபி, கொடிமரம் இல்லாத மடாலய அமைப்புடையது. நவக்கிரக கோவிலும், முருகன் கோவிலும் கட்டப்பட்டுள்ளன. நாள் தோறும் உச்சிக்காலப் பூசை நடைபெறுகின்றது.
இவ்வூரில் வாழ்கின்ற பெத்தாக்கிழவி குடும்பம், பேநாச்சி குடும்பம், சுரைக்காய் மூர்த்தி குடும்பம், போற்றி நாச்சி குடும்பம், செட்டி குடும்பம், வள்ளி நாயகி குடும்பம் ஆகிய ஆறு குடும்பங்களின் உறுப்பினர்களைக் கொண்ட அறங்காவலர் சபை யாப்பு விதிகளுக்கமைய ஆலயத்தை நிருவாகம் செய்கிறது.
ஆனி மாத உத்தர நட்சத்திரத்தில் தீர்த்தம் நிகழும் வகையில் 10 நாள் முன்னதாக வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா ஆரம்பமாகும். திருவிழாவானது பெருவிழாவாகக் கொண்டாட ஊர் ஒன்று கூடும். ஆனைமுகனின் திருவிழா தொடங்கினால் அயற் கிராமத்தவர்களுக்கும் ஆனந்தந்தான்.
ஜூன் 20ம் திகதி சனிக்கிழமை திருவிழா ஆரம்பமாகியது.
ஜூன் 29ம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு தீர்த்தோற்சவமும், தொடர்ந்து திருப்பொன்னூஞ்சலும் இடம்பெறும்.
உற்சவ நிகழ்வுகளை சிவஸ்ரீ மு- ரு. சச்சிதானந்தம் குருக்கள், சிவஸ்ரீ வே. கு. சபாநாயகம் குருக்கள் ஆகியோருடன் உதவிக் குருமார் பலரும் இணைந்து வேதாகம விதிமுறைப்படி நிகழ்த்தவுள்ளனர்.
விழாக் காலங்களில் வழமை போல் சுவாமி ஊர்வலம், அபிஷேக ஆராதனை, கூட்டுப்பிரார்த்தனை நாதஸ்வர மேளக் கச்சேரி, சமய சம்பந்தமான கலை நிகழ்வுகள், வாணவேடிக்கை என்பன நடைபெறும். இறுதிநாள் இரவு நடைபெறும் மாம்பழத் திருவிழாவுக்கான முன்னாயத்தங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுயம்புலிங்கப் பிள்ளையார்
மட்டக்களப்பு களுதாவளைச் சேர்ந்த இசைக்கலைஞர் சந்திரலிங்கம் மகேந்திரனால் பாடப்பட்ட பக்திப் பாமாலைகள் ஒளிப்பட இறுவட்டு வெளியீட்டு விழா எதிர்வரும் 31 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய முன்றலில் இவ்வாலய அறங்காவல் தலைவரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான க.பாஸ்கரன் தலைமையில் இடம்பெறவுள்ளது. களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவ சிஸ்ரீ மு.கு. சச்சிதானந்த குருக்கள் , களுதாவளை திருநீற்றுக்கேணி சிவ சக்தி ஸ்ரீ முருகன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வே.கு சபாநாயக குருக்கள் ஆகியோரின் ஆசியுரையுடன் ஆரம்பமாகும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை , தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் அருள்ராசாவும் , கௌரவ அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் திருமதி பாலாம்பிகை இராஜேஸ்வரன் , மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார அலுவலர் எழில்வாணி ஆகியோர் கலந்து கொள்வர். சுpறப்பு அதிதிகளாக சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய அறங்காவல் சபையினர்., திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலய அறங்காவல் சபை பிரதிநிதிகள் கலந்து கொள்வர். இநத நிகழ்வில் வரவேற்புரையினை ஆசிரியர் இ. அருள்ராசாவும் , அறிமுகவுரையினை தொழில்நுட்ப உத்தியோகத்தர் ப. குணசேகரமும் , வெளியீட்டுரையினை ஆசிரியர் க. நாராயணப்பிள்ளையும் , கருத்துரையினை களுதாவாளை மகாவித்தியாலய அதிபர் வ. கனகரெத்தினமும் , ஊடகவியலாளர் செல்லையா பேரின்பாசாவும் நிகழ்த்தவுள்ளனர்.